Wednesday, 15 May 2013

கல்வித்துறையின் கவனத்திற்கு... தினமணி தலையங்கம்


ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 தேர்வின்போது வெற்றிபெற்ற மாணவர்களின் பேட்டிகள், ஏழை மாணவர்களின் சாதனைகள் என எல்லாமும் மனநிறைவு தரும் செய்திகளாக வந்து விழும்போது, "கல்வித்துறையின் தனிப்பட்ட சாதனை' என்ன என்பதைப்பற்றி யாரும் யோசிப்பதில்லை.

 இதையும் மீறி சிலர் யோசிக்க முயன்றால், அவர்களுக்குத் தேவைப்படும் புள்ளிவிவரங்களைக் காட்டாமலே மறைத்துவிடும் புதிய உத்தியை தமிழக கல்வித்துறை கடந்த சில ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கிறது.
 "பிளஸ்-2' தேர்வு முடிவுகள் வெறுமனே மாணவர்களுக்கு மட்டும் திருப்புமுனையாக இருப்பதில்லை. அது ஒரு மாநிலத்தின் போக்கைத் தீர்மானிக்கவும், கணிக்கவுமான ஒரு வாய்ப்பு. நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை நமக்குத் தெரிவிக்கும் வழிகாட்டி.
 தமிழ்நாட்டில் 2013-ஆம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 8.53 லட்சம். இவர்களில் 7.56 லட்சம் பேர் பள்ளிகள் மூலமாகவும் மற்றவர்கள் தனித்தேர்வர்களாகவும் எழுதினார்கள் என்று கல்வித்துறை தெரிவிக்கிறது. இவர்களில் 60 விழுக்காடுக்கு அதிகமாக மதிப்பெண் பெற்றவர்கள் 4.62 லட்சம் பேர் என்றும் தெரிவிக்கிறது. அதாவது தேர்வு எழுதிய பாதிக்கும் மேற்பட்டோர் சராசரி 60 விழுக்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஒரு சாதனைதான். சென்ற ஆண்டைக் காட்டிலும் சுமார் 15,000 பேர் அதிகம்.
 ஆனால் இந்த 4.62 லட்சம் சிறந்த மாணவர்கள் எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர், அரசுப் பள்ளிகளில் எத்தனை பேர், தனியார் பள்ளிகளில் எத்தனை பேர் என்கின்ற விவரங்களைக் கல்வி அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. ஊடகங்களுக்கும் தருவதில்லை. இணையதளத்திலும் வெளியிடுவதில்லை. ஆனால், ஒரு மாநிலத்தின் கல்வித்தரத்தைக் கணிக்க இது மிக இன்றியமையாத புள்ளிவிவரம். 60 விழுக்காடு பெற்ற சிறந்த மாணவர்களில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய விவரங்களும் மிகவும் அவசியம்.
 அடுத்ததாக, இந்த மாணவர்கள் என்ன ஆகிறார்கள்? இவர்கள் அனைவரும் உயர் கல்வி பயிலச் சென்றார்களா? இதைப்பற்றியும் கல்வித்துறை கவலைப்படுவதில்லை.
2012-ஆம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதிய 8.23 லட்சம் மாணவர்களில் 4.48 லட்சம் பேர் 60 விழுக்காடுக்கு அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள். அப்படியானால், இவர்கள் அனைவரும் நிச்சயமாக உயர்கல்வி பயில்பவர்களாக இருக்க வேண்டும். இந்த மாணவர்கள் எந்தக் கல்லூரியில் சேர்ந்தார்கள் என்பதை, அந்தந்த கல்லூரிகள் தரும் மதிப்பெண் சான்றிதழ் பட்டியலின் குறியீட்டு எண்ணை வைத்து, கணினி மூலமாகவே கணித்துவிட முடியும்.
 எவ்வளவுபேர் பொறியியல் படிக்கிறார்கள்? எவ்வளவு பேர் மருத்துவம் பயில்கிறார்கள்? மற்ற கலை-அறிவியல் படிப்புகளில் சேர்ந்தோர் எத்தனை பேர்? நுழைவுத்தேர்வு மூலம் வெளிமாநிலங்களில் படிக்கச் சென்றோர் எத்தனை பேர்? உயர் கல்வியைத் தொடர முடியாமல், கடைகளிலும், நிறுவனங்களிலும் வேலைக்குச் சேர்ந்துவிட்டதாக கருதக்கூடியவர்கள் எத்தனை பேர்? இத்தகைய புள்ளிவிவரங்கள் தமிழகத்தின் உயர்கல்வியின் போக்கு, அதன் தேவை, எந்தத் துறையில் அதிக வரவேற்பு இருக்கிறது, எங்கு தேவையில்லாமல் மனிதஆற்றல் வீணாகிறது என்பதையெல்லாம் கணிக்கவும், மாறுதலுக்கு உட்படுத்தவும் அவசியம். இவற்றை கல்வித்துறை தனக்கு மட்டுமானதாகக் கருதுவது தவறு. இவை மக்கள் மன்றத்தில் பொதுவில் வைக்கப்படும்போதுதான் அரசின் உயர்கல்விக் கொள்கை குறித்துத் தீர்மானிக்கவும் கருத்து சொல்லவும் கல்வியாளர்களால் முடியும். அத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படும்.
 அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு என்பது தெரிந்துவிடக்கூடாது  என்பதற்காகவே இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் சிலரால் மறைக்கப்படுகின்றனவோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. அதுதான் காரணமென்றால், அப்படிச் செய்வது தமிழகத்துக்கு ஒட்டுமொத்தமாக இழைக்கப்படும் துரோகம் என்றே சொல்லலாம்.
 அரசுப் பள்ளிகள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அதற்கான காரணங்களைக் கண்டறியவும், குறைகளைக் களையவும் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டிய கல்வித் துறை, இதை மறைத்து வைப்பதன் மூலம், புற்றுநோயை மறைத்து வைக்கிறது.
 இப்போது தமிழக அரசு, அரசுப் பள்ளிகளுக்கு செலவிடுவதோடு, "அனைவருக்கும்  கல்வி' சட்டப்படி, ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் சேர்க்கப்படும் 25 விழுக்காடு மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் செலுத்தவிருக்கிறது. அப்படியானால் இன்னும் கூடுதல் நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்கவிருக்கிறது.
 இந்நிலையில், உயர்கல்விக்கு மாணவர்களை அனுப்புவதில் அரசுப் பள்ளிகளின் பங்களிப்பு என்ன என்பதையும், தனியார் பள்ளிகளின் பங்களிப்பு என்ன என்பதையும் கணிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.
 உயர்கல்விக்கு வருவோர் எத்தனை பேர், எந்த இனத்தவர், எத்தகைய வருவாய்ப் பிரிவினர் என்கின்ற கணிப்புகள் அவர்களுக்கு ஏற்ற புதிய பாடத்திட்டம், தொழில்துறையுடன் இணைந்த படிப்புகள், ஒவ்வொரு கல்விக்கேற்றபடி ஆண்டுகளை நீட்டித்து அல்லது குறைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அனைத்தையும் பரிசீலிக்க வாய்ப்பளிக்கும்.
 கல்வித்துறை தனது புள்ளிவிவரங்களை மக்கள் மன்றத்துக்குத் திறந்து வைக்கட்டும்.  தீர்வுகளுக்கான ஆலோசனைகளை சமூக ஆய்வு அமைப்புகளும், கல்வியாளர்களும் சொல்வார்கள்.
 திறந்த புத்தகமாக இருக்கட்டும் கல்வித்துறை. எத்தனை நாள்தான் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டாள்தனத்தைத் தொடர்வது?

No comments: